களக்காடு அருகே பச்சாளன் குளம் உடைப்பு ஏற்படும் அபாயம் மணல் மூடைகள் அடுக்கி சரிசெய்தனர்
களக்காடு அருகே பச்சாளன் குளத்தில் உடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து கிராம மக்கள் மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி உடைப்பு ஏற்படாமல் இருக்க சரிசெய்தனர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள இடையன்குளம், பச்சாளன் குளத்துக்கு தற்போது பெய்து வரும் மழையினால் கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் குளக்கரையில் 4 இடங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கரைகளில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுபற்றி அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
ஆனால் உடைப்புகள் சீரமைக்கப்படாததால் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். 4 குழுக்களாக பிரிந்து சென்று, உடையும் அபாய நிலையில் உள்ள 4 இடங்களில் மணல் மூட்டைகள் கொண்டு அடுக்கினர். மொத்தமாக ஆயிரம் மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கினர். மேலும் கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த செடி புதர்களை வெட்டி அகற்றி சுத்தம் செய்தனர். கசிவு ஏற்படும் இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கியும் தொடர்ந்து குளத்து நீர் வெளியேறி வருகிறது.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனித்து உடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளத்தின் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கரை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு அப்பகுதியிலேயே உணவு சமைத்து பரிமாறப்பட்டது.