சினிமா மோகத்தை வைத்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு தலைகுனிவு
சினிமாக மோகத்தை வைத்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு தலைகுனிவு என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறினார்.
ஊட்டி,
ஊட்டியில் நேற்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 1967–ம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசியலில் சினிமாத்துறையை சேர்ந்தவர்களே முதல்– அமைச்சராக வர முடிகிறது. அமெரிக்காவில் சினிமா மோகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரொனால்டு ரீகன் என்ற ஜனாதிபதியுடன் சினிமா மோகம் நின்று விட்டது. அதேபோல் ஆந்திரா மாநிலத்தில் என்.டி.ராமராவ் முதல்–மந்திரிக்கு பின்னர் நின்று விட்டது. ஆனால், தமிழகத்தில் தான் சினிமா மோகத்தை வைத்து நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு தலைகுனிவாகும். அறியாமையின் வெளிப்பாடு.
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாராலும் தடுக்க முடியாது. இவர்களுக்கு மட்டுமே ஆளும் தகுதி உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ள இயலாது. ஜெயலலிதா மறைந்து விட்டதாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமையில் உள்ளதாலும் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இதனை நிரப்புவதற்கு நடிகர்களுக்கு தற்போது ஆசை வந்து விட்டது. இதை பார்த்து அண்டை மாநில மக்கள் தமிழகத்தை எள்ளி நகையாடும் போக்கு காணப்படுகிறது. இது வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் வனங்களின் பரப்பளவு குறைந்து மாசுபட்டு வருகிறது. மலைப்பகுதிகளின் சரிவுகளில் கட்டிடங்கள் கட்டுவதால் மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வனங்கள் அழிவதால், நீலகிரியில் பெய்யும் மழை அளவு குறைந்து கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, வனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21–ந் தேதி முதல் விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள பனை, தென்னை மற்றும் ஈச்ச மரங்களில் இருந்து ‘கள்’ இறக்குவார்கள். அதனை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்வார்கள். தமிழகத்தில் ‘கள்’ இறக்கி விற்பனை செய்ய தடை இருக்கிறது. ஆனால், விவசாயிகள் பயன்படுத்துவதற்கு தடை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.