என் மீது பா.ஜனதாவினர் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் சித்தராமையா பேச்சு


என் மீது பா.ஜனதாவினர் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 12 Nov 2017 4:00 AM IST (Updated: 12 Nov 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

என் மீது பா.ஜனதாவினர் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகுவேன் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

என் மீது பா.ஜனதாவினர் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகுவேன் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சித்தராமையா அடிக்கல் நாட்டினார்

பெங்களூரு கோவிந்தராஜ் நகர், விஜயநகர் சட்டசபை தொகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முதல்–மந்திரி சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். மேலும் சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல்லும் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

அரசியலில் இருந்து விலகுவேன்

காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பா.ஜனதா ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் மாநிலத்தில் நடைபெறவில்லை. பெங்களூரு மாநகராட்சி பா.ஜனதாவின் வசம் இருந்தபோது, மாநகராட்சிக்கு வந்த வரி பணத்தை எல்லாம் பா.ஜனதாவினர் சுருட்டினார்கள். ஊழல் மட்டுமே நடந்தது. எந்த வளர்ச்சி பணியையும் செய்யவில்லை. ஆனால் பெங்களூரு மாநகராட்சி காங்கிரஸ் கட்சியின் வசம் வந்தபின்பு தான் வளர்ச்சி பணிகளே நடைபெறுகிறது.

பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து மாநில மக்களுக்கு நன்கு தெரியும். தற்போது நான் ஊழலில் ஈடுபடுவதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். என் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டை ஒன்றை கூட பா.ஜனதாவினர் நிரூபிக்கவில்லை. நான் ஊழலில் ஈடுபட்டால் தானே, அவர்கள் நிரூபிப்பார்கள். என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறி வருகின்றனர். பா.ஜனதாவினர் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகுவேன்.

உண்மை பேசியதே கிடையாது

பா.ஜனதாவினர் நயவஞ்சகர்கள். மக்களை பேசி மயக்குவதிலும், பொய் பேசுவதிலும் வல்லவர்கள். அவர்கள் உண்மை பேசியதே கிடையாது. பெங்களூரு மாநகராட்சியில் ஊழல் இல்லாத ஆட்சியை காங்கிரஸ் நடத்தி வருகிறது. நகரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 15 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அனைத்தும் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படும்.

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும், பா.ஜனதா ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விவாதம் செய்ய பா.ஜனதாவினர் தயாரா?. ஊழல் புரிந்து சிறைக்கு சென்ற எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் கட்சியை பற்றியோ, என் மீதோ ஊழல் குற்றச்சாட்டு கூற தகுதி இல்லை.

இவ்வாறு சித்தராமையா பேசினார். இந்த நிகழ்ச்சியில் மந்திரி கிருஷ்ணப்பா, பிரியா கிருஷ்ணா எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.


Next Story