மைசூருவில் புதையலுக்காக சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி பெங்களூரு பூசாரி உள்பட 7 பேர் கைது
மைசூருவில், புதையலுக்காக சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த பூசாரி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு,
மைசூருவில், புதையலுக்காக சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த பூசாரி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
நரபலிபெங்களூருவை சேர்ந்தவர் சதீஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா நேரலே கிராமத்திற்கு வந்தார். அவர் அங்கு தன்னை பூசாரி என்றும், தன்னால் நிலங்களில் புதையல் இருக்கும் இடங்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த கிராமத்தை சேர்ந்த ரவீந்திரா உள்பட 6 பேர் தங்களுக்கு புதையல் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தங்களுடைய நிலங்களில் புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தருமாறு சதீசிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு சதீஷ், நரபலி கொடுத்தால்தான் புதையல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியும் என்றும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் ரவீந்திரா உள்பட 6 பேர், நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு பூசாரி சதீசிடம் சென்று உள்ளனர். அவர் அங்கு உள்ள ஒரு விவசாய நிலத்தில் குழி தோண்டி அதில் சிறுவனை நரபலி கொடுக்க பூஜைகள் செய்து கொண்டு இருந்தார்.
கைதுஇதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த பூசாரி சதீஷ் உள்பட 7 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் நரபலி கொடுக்க இருந்த சிறுவனையும் மீட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நிலத்தில் இருக்கும் புதையலை கண்டுபிடிப்பதற்காக சிறுவனை பூசாரி சதீஷ் நரபலி கொடுக்க இருந்தது தெரியவந்தது. இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த ரவீந்திரா உள்பட 6 பேர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுகுறித்து நஞ்சன்கூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.