கியாஸ் சிலிண்டர் வெடித்து மாற்றுத்திறனாளி, 2 மகள்கள் படுகாயம்


கியாஸ் சிலிண்டர் வெடித்து மாற்றுத்திறனாளி, 2 மகள்கள் படுகாயம்
x
தினத்தந்தி 12 Nov 2017 3:45 AM IST (Updated: 12 Nov 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே, கியாஸ் சிலிண்டர் வெடித்து மாற்றுத்திறனாளி, 2 மகள்கள் படுகாயமடைந்தனர்.

போடி,

போடியை அடுத்த சிவமலை அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 62). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராமுத்தாய் (54). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் தங்கி வேலை பார்க்கிறார். இவர்களுக்கு சீதாலட்சுமி (15), சிவலட்சுமி (13) ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளியான கிருஷ்ணனின் மகள்கள் தான் வீட்டில் சமையல் வேலை செய்வார்கள். அவர்களுக்கு கிருஷ்ணனும் உதவி செய்வார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தந்தையுடன் சேர்ந்து 2 மகள்களும் உணவு சமைத்து சாப்பிட்டனர். முன்னதாக சமையல் முடிந்ததும், கியாஸ் இணைப்பை துண்டிக்க அவர்கள் மறந்துவிட்டனர்.

பின்னர் அவர்கள் தூங்கச்சென்றனர். இணைப்பு துண்டிக்கப்படாததால் சிலிண்டரில் உள்ள கியாஸ் இரவு முழுவதும் கசிந்து அந்த அறை முழுவதும் பரவியது. நேற்று காலை கிருஷ்ணன் எழுந்து வீட்டில் உள்ள மின்விளக்கின் சுவிட்சை போட்டார். அப்போது கண்இமைக்கும் நேரத்துக்குள் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதன் காரணமாக அந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் வீட்டுக்குள் சிக்கிய கிருஷ்ணனுக்கும் அவருடைய 2 மகள்களுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி வீட்டில் பரவிய தீயை அணைத்தனர். மேலும் போடி தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story