சசிகலாவின் வக்கீல் வீடு உள்பட 5 இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை


சசிகலாவின் வக்கீல் வீடு உள்பட 5 இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 12 Nov 2017 4:45 AM IST (Updated: 12 Nov 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சசிகலாவின் வக்கீல் செந்தில் வீடு உள்பட 5 இடங்களில் நேற்று 3-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சொத்துக்கள் விவரம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நாமக்கல்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் கடந்த 9-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல்லில் வக்கீல் செந்தில் வீடு உள்பட 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். வக்கீல் செந்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் வாதாடியவர் ஆவார்.

இந்த நிலையில் 3 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில் செந்தில் வீடு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி வீடு, செந்திலிடம் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வரும் பாண்டியன் வீடு, செந்திலின் நண்பரான மற்றொரு வக்கீல் பிரகாஷின் அலுவலகம், செந்திலுடன் இணைந்து தொழில் செய்து வரும் சுப்பிரமணியத்தின் அலுவலகம் ஆகிய 5 இடங்களில் நேற்று 3-வது நாளாக சோதனை நீடித்தது.

நேற்று முன்தினம் செந்திலின் தங்கை லாவண்யா மூலம் வங்கி பெட்டகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட நகை மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல் வக்கீல் பாண்டியனின் வங்கி பெட்டகத்தில் இருந்தும் தங்கநகைகள் மற்றும் ஆவணங்களை எடுத்து வந்து ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே வருமான வரித்துறையினர் வக்கீல் செந்தில் உள்ளிட்ட 5 பேரும் சமீபத்தில் வாங்கிய சொத்து சம்பந்தமான விவரங்களை சேகரித்து வந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக குடும்பத்தினரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சோதனை தொடங்கிய நாள் முதல் வக்கீல் செந்தில், ஏ.வி.பாலுசாமி ஆகியோர் வீட்டில் இல்லை. எனவே அவர்களது வீட்டில் உள்ள குறிப்பிட்ட சில அறைகளை திறக்க முடியவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அவற்றில் என்ன உள்ளது? என்பதை அறிய வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவே சோதனை நீடிக்க காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் ஒரு அறைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, வக்கீல் செந்தில் வீட்டில் சோதனை நடந்தபோது டிரைவர் ஒருவர் வெளியே சென்று ‘பேக்கிங்’ செய்வதற்கு தேவையான நாடா போன்ற கயிறுகளை வாங்கி வந்தார். அது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களை ‘பேக்கிங்’ செய்வதற்காக வாங்கி வரப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இருப்பினும் இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதா? முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

கோவை, சேலம், திருச்சி பகுதிகளில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் நாமக்கல்லில் முகாமிட்டு பல்வேறு குழுக்களாக பிரிந்து 3-வது நாளாக சோதனை நடத்தி வரும் சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story