செஞ்சி அருகே டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு
செஞ்சி அருகே டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
செஞ்சி,
செஞ்சி அருகே மரூர் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மரூர் கிராமத்தில் வீடு வீடாக சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா? என்று பார்வையிட்டார்.
அப்போது சில வீடுகள் சுகாதாரமின்றி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கும்படி உத்தரவிட்டார்.
பின்னர் அவர் அங்கிருந்த மக்களிடம், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினார்.
தொடர்ந்து கிராமத்தில் ஆங்காங்கே தேங்கி கிடந்த தண்ணீரை அகற்றி சுத்தம் செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சிவகுரு, மருத்துவ அலுவலர்கள் பிரபாவதி, துரியோதனன், பணி மேற்பார்வையாளர் கொளஞ்சி, ஊராட்சி செயலாளர் வினாயகமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.