கீழையூர் ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின வேளாண்மை இயக்குனர் ஆய்வு


கீழையூர் ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின வேளாண்மை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 12 Nov 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

கீழையூர் ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.

வேளாங்கண்ணி,

தமிழகத்தில் கடந்த 27-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைதொடர்ந்து நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 9 நாட்கள் கனமழை பெய்தது. இதனால் நாகை மாவட்டத்தில் வயல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. நாகை மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்த மேட்டூர் அணை தண்ணீரை நம்பி சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்த நிலையில் கனமழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆய்வு

மேலும் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதில் கீழையூர் ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த நிலையில் சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கீழையூர் ஒன்றியத்தில் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கீழையூர், ஆலங்குடி, திருவாய்மூர், மேலப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் தங்களது வயல்களில் தண்ணீர் சூழ்ந்ததால் அழுகிபோன நெற்பயிர்களை எடுத்து அதிகாரியிடம் காண்பித்தனர். அப்போது நெல்லின் ரகம், எத்தனை நாள் பயிர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரி, விவசாயிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது நாகை இணை இயக்குனர் மயில்வாகனன், ஆலோசகர் தனசேகரன், வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரகாசன், வேளாண்மை உதவி அலுவலர் சந்தோஷ்குமார், தமிழ் காவிரி விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர். 

Related Tags :
Next Story