விவசாயிகளுக்கு காலதாமதமின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் த.மா.கா. விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம்


விவசாயிகளுக்கு காலதாமதமின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் த.மா.கா. விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 12 Nov 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு காலதாமதமின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்று த.மா.கா. விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

த.மா.கா. விவசாய அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் கைலாசம், வாசு கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் திருப்பதி வாண்டையார் வரவேற்றார்.

கூட்டத்தில், திருச்சியில் வருகிற 25-ந் தேதி நடைபெறும் த.மா.கா.வின் 4-ம் ஆண்டு தொடக்கவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க வேண்டும். திருவாரூர், நாகை மாவட்டங்களில் பெய்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மத்தியஅரசு அறிவிக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், குண்டர்களை வைத்து விவசாயிகளிடம் கட்டாயமாக கடன் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகள் கூடுதலாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.4,500 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு தர வேண்டிய 60 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகஅரசு உடனடியாக திறந்துவிட வேண்டும். மத்தியஅரசு பட்டியலில் வேளாண்மையை இணைக்கக்கூடாது. தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே மத்தியஅரசு உடனடியாக கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில துணை பொதுச் செயலாளர்கள் கார்த்தி, தியாகராஜன், ரெங்கராஜ், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர்கள் சாகுல்அமீது, விஜயராகவன், தஞ்சை மாவட்ட தலைவர்கள் கணபதி, குமார், மாநகர தலைவர் குணசேகரன், மாநகர பொதுச் செயலாளர் ராம்.மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநில செயலாளர் திருமானூர் கார்த்தி நன்றி கூறினார். 

Next Story