குறிஞ்சிப்பாடி அருகே பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு


குறிஞ்சிப்பாடி அருகே பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 12 Nov 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

குறிஞ்சிப்பாடி,

சென்னை கொடுங்கையூரில் மழைகாரணமாக தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து பாவனா, யுவஸ்ரீ என்கிற 2 சிறுமிகள் கடந்த 1–ந்தேதி பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைபோன்று அரசு பள்ளிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது:–

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரியகண்ணாடி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பெரிய தூண் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுமார் 6 அடி வரையில் ஆழம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்த பள்ளிக்கூடத்தின் அருகே வசித்து வருபவர் ஆனந்தஜோதி. இவரது மகன் கீர்த்தி ராஜா(வயது 7). இவன் அந்த பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான். அதேபோன்று அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் விஸ்வா(4). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று மாலை கீர்த்தி ராஜா, விஸ்வா ஆகிய இருவரும் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டும் பணி நடந்து வரும் இடத்திற்கு சென்று விளையாடினர். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர், இருப்பினும் இருவரையும் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

இந்நிலையில், அங்கு தோண்டப்பட்டு இருந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறுவனின் உடல் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடன் பள்ளித்தின் உள்ளே இறங்கி பார்த்தனர். அப்போது கீர்த்தி ராஜா, விஷ்வா ஆகிய இருவரும் அந்த பள்ளத்தின் உள்ளே பிணமாக கிடந்தனர்.

இதைபார்த்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது, கல்நெஞ்சையும் கரைய செய்யும் வகையில் இருந்தது. சிறுவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த போது, தவறி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story