மனைவி தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மின்வாரிய ஊழியர் கைது
மனைவி தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மின்வாரிய ஊழியர் கைது
இளம்பிள்ளை,
காகாபாளையம் அருகே கச்சுப்பள்ளி ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 37). கன்னந்தேரி மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பானுப்பிரியா (27). இவர்களுக்கு தேஜாஸ்ரீ (5), கிருபாஸ்ரீ (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், மனம் உடைந்த பானுப்பிரியா கடந்த 7–ந் தேதி இரவு, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவரது உடலில் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் கணவன்–மனைவி இருவரும் தீக்காயம் அடைந்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பானுப்பிரியா 8–ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தீக்காயம் அடைந்த ராமசாமி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பானுப்பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக மின்வாரிய ஊழியர் ராமசாமியை நேற்று போலீசார் கைது செய்தனர்.