கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 36 பேர் கைது
கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
தொழிலாளர் நலச்சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர உள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுவையில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக அவர்கள் நேற்று காலை ரங்கப்பிள்ளை வீதியில் ஒன்று கூடினர். அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். தலைமை தபால் நிலையம் அருகே அவர்கள் வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியகடை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கேயே அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.