4 வயது சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற வளர்ப்பு தந்தை கைது


4 வயது சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற வளர்ப்பு தந்தை கைது
x
தினத்தந்தி 12 Nov 2017 3:45 AM IST (Updated: 12 Nov 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

4 வயது சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

4 வயது சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பக்கத்து வீட்டில் சண்டை

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்த ஒரு பெண் விஷால் ஜெய்ஸ்வால் (வயது25) என்ற வாலிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் பியூஷ் (4) என்ற சிறுவன் உள்பட 3 மகன்கள் உண்டு.

இந்த நிலையில், விஷால் ஜெய்ஸ்வாலுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் இருந்து சிறுவர்கள் மூன்று பேரையும் அந்த வீட்டுக்கு விளையாட செல்ல கூடாது என்று அவர் மிரட்டி வந்துள்ளார்.

சிறுவன் கொலை

நேற்று முன்தினம் சிறுவன் பியூஷ் அந்த வீட்டிற்கு சென்று விளையாடி இருக்கிறான். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விஷால் ஜெய்ஸ்வால் இதையறிந்து கடும் ஆத்திரம் அடைந்தார். சிறுவன் பியூசை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தார். பின்னர் அவனை ஈவு, இரக்கமின்றி வாளியில் இருந்த தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்தார்.

இதை பார்த்து மற்ற இரண்டு சிறுவர்களும் கதறி அழுதனர். அவர்களிடம் சம்பவத்தை வெளியில் கூறினால் உங்களுக்கும் இந்த கதி தான் ஏற்படும் என்று மிரட்டினார்.

கைது

இந்த நிலையில், வேலைக்கு சென்றிருந்த விஷால் ஜெய்ஸ்வாலின் மனைவி வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுவர்கள் இருவரும் பியூஷ் கொலை செய்யப்பட்டது பற்றி தாயிடம் கூறி கதறி அழுதனர். இதை கேட்டு பதறி போன அவர் வாளிக்குள் பிணமாக கிடந்த மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தகவல் அறிந்து வந்த துலிஞ் போலீசார் சிறுவன் பியூசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விஷால் ஜெய்ஸ்வாலை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story