ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை கடல் அரிப்பை தடுக்க 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி


ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை கடல் அரிப்பை தடுக்க 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி
x
தினத்தந்தி 13 Nov 2017 3:45 AM IST (Updated: 13 Nov 2017 12:02 AM IST)
t-max-icont-min-icon

கடல் அரிப்பை தடுக்க ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி கடற்கரை வரை நகராட்சி மூலம் 10 ஆயிரம் பனை வதைகள் நடும் பணி நடந்து வருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் முதல் தனுஷ்கோடி வரை கடல் அரிப்பை தடுக்க 10 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ராமேசுவரம் நகராட்சி மூலம் நேற்று முதல் தனுஷ்கோடி வரை பனை விதைகள் நடும் பணி தொடங்கியது. ராமகிருஷ்ணபுரம் பகுதியில் பனை விதை நடும் பணியை நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் தொடங்கி வைத்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் 25–க்கும் மேற்பட்ட நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் கூறியதாவது:–

கடல் அரிப்பை தடுப்பத்தில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை பசுமையாக்கவும், கடல் அரிப்பை தடுக்கவும், சுற்றுலா பயணிகளிடம் பனை மரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்ட கலெக்டர் நடராஜன் பனை விதைகளை நட உத்தரவிட்டுள்ளார்.

ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ஆயிரம் பனை விதைகளை நட திட்டமிடப்பட்டு உள்ளது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரை வரை 3,000 பனை விதைகள் நடப்பட்டு உள்ளன. இன்னும் 3 நாட்களுக்குள் அரிச்சல்முனை கடற்கரை வரை பனை விதைகள் நடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story