ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமரிடம் விசாரணை நடத்த வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தஞ்சையில் திருநாவுக்கரசர் கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 14–ந் தேதி திருவள்ளூரில் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா நடக்கிறது. வருகிற 18–ந் தேதி கோவையில் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக கூறியுள்ளார். 19–ந் தேதி இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சியினர் வழங்குவார்கள்.
எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக கொண்டு வந்தபோது அதை எதிர்த்து கொறடா உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்களின் தலையெழுத்து கோர்ட்டில் இருக்கிறது. இந்த வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும். அவர்கள் எம்.எல்.ஏ.க்களா? இல்லையா? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அ.தி.மு.க.வில் உள்ள ஒரு அணியினரை குறி வைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்த 1 மாதத்தில் இந்த சோதனையை நடத்தி இருந்தால் இப்போது என்னென்ன கிடைத்தது என்று கூறப்படுகிறதோ அதை விட கூடுதலாக கிடைத்து இருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது சோதனை செய்து இருந்தால் அதிகமாக கிடைத்து இருக்கும்.
இரட்டைஇலை சின்னம் யாருக்கு என்று முடிவு தெரிவிக்க வேண்டிய இறுதிகட்டம் வந்துவிட்டது. இரட்டைஇலையை கொடுக்கக்கூடிய அணி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணியை பலப்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. அனேகமாக இந்த அணிக்கு இரட்டைஇலையை கொடுக்க இருப்பதாக எனது கணிப்பு. இவர்களுடன் வரும் காலத்தில் உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து தமிழகத்தில் காலூன்ற முடியுமா? என பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இதற்காக தான் தினகரன் அணியினரை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் தவறு இல்லை. நல்லது தான். எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி நேரில் வந்து பார்த்து, சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது பிரதமர் மோடி வந்து ஏன்? பார்க்கவில்லை என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடக்கும் நீதி விசாரணையில் பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களையும் விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது இலக்கு. அந்த இலக்கை நோக்கி காங்கிரஸ் தொடர்ந்து பயணம் செய்யும். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க உரிமை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.