கல்லூரி மாணவர் கொன்று புதைக்கப்பட்டாரா? சந்தேகத்தின்பேரில் நண்பர்களிடம் விசாரணை


கல்லூரி மாணவர் கொன்று புதைக்கப்பட்டாரா? சந்தேகத்தின்பேரில் நண்பர்களிடம் விசாரணை
x
தினத்தந்தி 12 Nov 2017 11:00 PM GMT (Updated: 12 Nov 2017 6:35 PM GMT)

தஞ்சையில் கல்லூரி மாணவர் கொன்று புதைக்கப்பட்டாரா? என சந்தேகத்தின்பேரில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை வடக்குவாசல் ஏ.ஒய்.ஏ.நாடார் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சரவணன்(வயது18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கராத்தே பயிற்சி பெற்றுள்ளார். விடுமுறை நாட்களில் தப்பு அடிக்கும் பணி செய்வது வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் 30–ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் சரவணனின் பெற்றோர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை சரவணன் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில் சரவணனின் நண்பர்களை அழைத்து விசாரணை நடத்தினால் உண்மை நிலை தெரியும் என்று கூறி சரவணனின் பெற்றோர், உறவினர்கள் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

காணாமல் போன சரவணனை கொன்று புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரணைக்காக மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சரவணன் காணாமல் போனதற்கும், எங்களது மகன்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று கூறி 5 பேரின் பெற்றோர்களும் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

இரு தரப்பினரும் வந்ததால் பரபரப்பு நிலவியது. இதை அறிந்த தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து சரவணனின் நிலை என்ன? என்பது குறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, சரவணன் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சரவணனின் நெருங்கிய நண்பர் சென்னையில் இருப்பதாக தெரிகிறது. அங்கு போலீசார் விரைந்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னரே என்ன நடந்தது என்பது தெரியவரும். நாளை(இன்று) முழு விவரம் தெரியும் என்றார்.


Next Story