அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தென்கோடி வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்


அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தென்கோடி வாய்க்காலை சீரமைத்த விவசாயிகள்
x
தினத்தந்தி 13 Nov 2017 3:30 AM IST (Updated: 13 Nov 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தென்கோடி வாய்க்காலை விவசாயிகளை சீரமைத்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே காணைகுப்பத்தில் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஏரிக்கு மல்லிகைப்பட்டு அணைக்கட்டில் இருந்து தென்கோடி வாய்க்கால் வழியாக மழை நீர் வரும். இந்த வாய்க்காலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான முறையில் பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

இதன் காரணமாக அந்த வாய்க்கால் தற்போது தூர்ந்துபோய் உள்ளதால், அதன் வழியாக மழை நீர் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இது குறித்து புகார் அளித்த பின்பும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக வேறு வழியின்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து காங்கியனூர்– காணைகுப்பம் ஏரி வரை 3 கி,மீட்டர் தூரத்திற்கு தென்கோடி வாய்க்காலை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரினர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்து விழுப்புரம் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மல்லிகைப்பட்டு அணைக்கட்டு நிரம்பியது.

இதையடுத்து அங்கிருந்து பாசனத்துக்காக தென்கோடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அந்த தண்ணீர் காங்கியனூர் கிராமம் வரை மட்டுமே வந்தது. வாய்க்கால் தூர்வாரப்படாத காரணத்தால் அங்கிருந்து காணைகுப்பம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகளான நாங்கள் ஒன்றிணைந்து தென்கோடி வாய்க்காலை தூர்வாரினோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story