மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்: தண்ணீரை வடிய வைக்க வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரம்


மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்: தண்ணீரை வடிய வைக்க வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Nov 2017 4:15 AM IST (Updated: 13 Nov 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்: தண்ணீரை வடிய வைக்க வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரம்

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீரில் சம்பா பயிர்கள் மூழ்கின. இதையடுத்து வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணி

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய கனமழை கடந்த 10 நாட்கள் கொட்டி தீர்த்தது. இதனால் நன்னிலம், கோட்டூர், திருவாரூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. வடிகால்கள் முறையாக தூர்வாராததால் வயல்களில் தேங்கிய நீர் வடிய வாய்ப்பின்றி இளம் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது.

இதில் திருவாரூர் அருகே காணூர் பகுதியில் விளை நிலங்களில் தேங்கி இருந்த தண்ணீரை வடிய வைப்பதற்காக பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதேபோல் ஒடாச்சேரி உள்பட பல பகுதிகளில் வடிகால்களை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனால் வயல்களில் சம்பா பயிர்களை சூழ்ந்து இருந்த வெள்ளநீர் வடிய தொடங்கியது.

இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு யூரியாவுடன் ஜிப்சம், பொட்டாஷ் கலந்து அடியுரமாக இட்டு வருகின்றனர். மேலும் யூரியாவுடன் ஜிங்க்சல்பேட் கலந்து தண்ணீரில் கரைத்து பயிர்கள் மீது தெளித்து வருகின்றனர். அழுகும் நிலையில் உள்ள இளம் பயிர்களை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story