பழனியில், நூதன முறையில் ஏ.டி.எம். கார்டுகளை திருடி பணம் எடுத்த வாலிபர்கள் 2 பேர் கைது


பழனியில், நூதன முறையில் ஏ.டி.எம். கார்டுகளை திருடி பணம் எடுத்த வாலிபர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2017 4:30 AM IST (Updated: 13 Nov 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், நூதன முறையில் ஏ.டி.எம்.கார்டுகளை திருடி பணம் எடுத்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழனி,

பழனி அடிவாரம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 72). சமையல் தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் பழனி தலைமை தபால் நிலைய ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அந்த மையத்தில் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர், ராஜனிடம் தான் பணம் எடுக்க உதவுவதாக கூறியுள்ளார். இதற்கு ராஜனும் சம்மதம் தெரிவித்து அவரிடம் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்தார்.

பின்னர் ராஜன் கேட்ட தொகையை அந்த வாலிபர் எடுத்துக்கொடுத்துவிட்டு கார்டையும் திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பணத்துடன் வீட்டுக்கு திரும்பிய ராஜனிடம் வீட்டில் இருந்தவர்கள் மேலும் பணம் வேண்டும் என கேட்டுள்ளனர். இதையடுத்து மீண்டும் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற ராஜன் தான் வைத்திருந்த ஏ.டி.எம்.கார்டை எந்திரத்தில் நுழைத்தார். ஆனால் அந்த கார்டு மூலம் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதையடுத்து அந்த கார்டை அவர் சோதனை செய்த போது அது அவருடைய கார்டு இல்லை என்பதும், போலியான கார்டு என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டுவிட்டதாக அவருடைய செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜன் உடனே தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் அவர் பணம் எடுத்த ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ராஜனுக்கு பணம் எடுக்க உதவிய வாலிபர், நூதன முறையில் அவருடைய ஏ.டி.எம்.கார்டை திருடிக்கொண்டு அதற்கு பதிலாக போலியான கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் இது குறித்து பழனி நகர் போலீசில் ராஜன் புகார் அளித்தார்.

இந்த நிலையில் பழனி அருகே உள்ள கனபதிநகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளியான பெரியசந்தனம் (32) என்பவர் அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்ற போது, அங்கிருந்த 2 வாலிபர்கள் பணம் எடுக்க உதவுவதாக கூறி பெரியசந்தனத்திடம் இருந்து ஏ.டி.எம். கார்டு, ரகசிய குறியீட்டு எண்ணை பெற்றனர். பின்னர் பெரியசந்தனம் கூறிய தொகையை எடுத்துக்கொடுத்துவிட்டு கார்டையும் கொடுத்துள்ளனர்.

அதனை பெற்றுக்கொண்டு வெளியே வந்த பெரியசந்தனம் பணத்தையும், ஏ.டி.எம்.கார்டையும் சரிபார்த்தார். அப்போது ஏ.டி.எம்.கார்டு போலியானது என்பது தெரியவந்தது. உடனே அந்த ஏ.டி.எம். மையத்துக்கு அவர் சென்ற போது, 2 வாலிபர்களும் சேர்ந்து அவருடைய ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொண்டிருந்தனர். உடனே அவர்களை பிடித்து பழனி நகர் போலீசில் ஒப்படைத்தார். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த தவசி மகன் சங்கர் (23), மனோகரன் மகன் அருண்பாண்டியன் (24) என்பதும், ராஜன், பெரியசந்தனம் உள்பட பலரிடம் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 56 ஏ.டி.எம். மையங்களில் இது போன்று அவர்கள் பண மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story