மும்பை– புனே நெடுஞ்சாலையில் விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி டேங்கர் லாரி மீது கார் மோதியது
மும்பை– புனே நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
மும்பை,
மும்பை– புனே நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
மகளை பார்க்க சென்றார்நவிமும்பை பன்வெலை சேர்ந்தவர் குமார் ஒஸ்வால்(வயது48). இவரது மனைவி விமல்(47). இவர்களுடைய மகள் நித்தி ஜெயின். நித்தி ஜெயினுக்கு 2 வருடங்களுக்கு முன்பு புனேயை சேர்ந்த ஹித்தேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நித்தி ஜெயின் கணவருடன் புனேயில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் குமார் ஒஸ்வால், மனைவியுடன் சில நாட்களுக்கு முன் மகளை பார்க்க புனேவிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் மகளுடன் பன்வெல் நோக்கி காரில் மும்பை– புனே நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பளம்போல நொறுங்கிய கார்கப்போலி அருகே சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதை குமார் ஒஸ்வால் கவனிக்கவில்லை. இதனால் வேகமாக சென்ற அவரது கார், கண் இமைக்கும் நேரத்தில் தண்ணீர் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்பளம்போல நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி குமார் ஒஸ்வால், அவரது மனைவி விமல் மற்றும் மகள் நித்தி ஜெயின் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். எனினும் காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளால் மீட்க முடியவில்லை.
3 பேர் பலிஇது குறித்து தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கியாஸ் கட்டரால் காரை வெட்டி உள்ளே படுகாயங்களுடன் கிடந்தவர்களை மீட்டனர். பின்னர் 3 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த விபத்து குறித்து கப்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.