துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.3½ லட்சம் தங்கம், பணம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்
கல்யாணில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.3½ லட்சம் தங்கம், பணம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது.
தானே,
கல்யாணில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் ரூ.3½ லட்சம் தங்கம், பணம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கி முனையில் கொள்ளைதானே மாவட்டம் கல்யாணில் நகைக்கடை நடத்தி வருபவர் ஏக்நாத் ஜாதவ்(வயது 61). இவர் நேற்று முன்தினம் மதியம் கடையில் தனியாக இருந்தார். இந்தநிலையில் பிற்பகல் 3.15 மணியளவில் கடைக்குள் நுழைந்த 2 பேர் திடீரென துப்பாக்கியை காட்டி சத்தம்போட்டால் கொலை செய்துவிடுவோம் என ஏக்நாத் ஜாதவை மிரட்டினர். எனினும் கடை வாசலுக்கு வந்த ஏக்நாத் ஜாதவ் உதவிகேட்டு சத்தம் போட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன் ஒருவன் கையில் இருந்த துப்பாக்கியால் ஏக்நாத் ஜாதவை தலையில் அடித்தான். இந்தநிலையில் மற்றொருவன் கடையில் இருந்த தங்கநகைகள், பணத்தை எல்லாம் வாரி சுருட்டினான். பின்னர் கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிஓடினர். ஏக்நாத் ஜாதவ் அவர்களை துரத்திச்சென்றார்.
எனினும் கொள்ளையர்கள் வெளியே தயாராக நின்ற தனது கூட்டாளிகளின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றனர். கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ.1½ லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
வலைவீச்சுஇந்த சம்பவம் குறித்து நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்கள் கடையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
பட்டப்பகலில் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைக்கடையில் ரூ.3½ லட்சம் தங்கநகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.