தூக்குப்போட்டு பெண் தற்கொலை: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது


தூக்குப்போட்டு பெண் தற்கொலை: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2017 3:15 AM IST (Updated: 14 Nov 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் டெல்லியில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிவப்பிரியா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டாகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்– மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தமபாளையம் கருப்பண்ணபிள்ளை தெருவில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சிவப்பிரியா வந்துவிட்டார். கடந்த 12–ந் தேதி பிரவீன்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. (பொறுப்பு) தங்கவேல் விசாரணை நடத்தினார். அப்போது சிவப்பிரியாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், வரதட்சணை கேட்டு சிவப்பிரியாவை அவருடைய கணவர் பிரவீன்குமாரும், தாயார் கணேஷ்வரியும் கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. அறிக்கையை போலீசாருக்கு அனுப்பினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார், அவருடைய தாயார் கணேஷ்வரி ஆகியோரை கைது செய்தனர்.


Next Story