புறா பிடிக்க முயன்ற போது 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்


புறா பிடிக்க முயன்ற போது 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:15 AM IST (Updated: 14 Nov 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே புறா பிடிக்க முயன்ற போது, 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

போடி,

தேனி மாவட்டம், போடியை அடுத்த பி.தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகன் சிவா (வயது 16). அவன் நேற்று மாலை 6 மணிக்கு அதே பகுதியில் உள்ள என்ஜினீயரியங் கல்லூரி மாணவர் விடுதி அருகே தோட்டத்துக்கு சென்றான். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகே உள்ள மரத்தில் அமர்ந்து இருந்த புறாவை சிவா பிடிக்க முயன்றான்.

இதில் எதிர்பாராதவிதமாக அவன் சுமார் 150 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தான். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. உடனே அவனுடைய நண்பர்கள் ஊருக்குள் சென்று சிவா கிணற்றில் தவறி விழுந்ததை பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சிவாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. கிணற்றுக்குள் விழுந்த அவன் மயங்கியதாக தெரிகிறது. இதனால் அவன் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சுமார் 3 மணி நேரம் போராடி கயிறு ஏணியின் மூலம் தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிவாவை உயிருடன் மீட்டனர்.

பின்பு காயம் அடைந்த அவனை சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story