துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபர் கைது


துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2017 4:45 AM IST (Updated: 14 Nov 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 52 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு வேலைவாய்ப்பு வாங்கித்தர விநாயகா டிராவல்சை அணுகலாம் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த கள்ளக்குறிச்சி பகுதி வாலிபர்கள், அங்கு சென்றனர்.

அப்போது துபாய் நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூ.20 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என 50–க்கும் மேற்பட்டோரிடம் அங்கு இருந்த நபர் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்தார். பின்னர் அவர்களுக்கு நேற்று (13–ந் தேதி) துபாய் செல்வதுபோல் அந்த நபரே கணினியில் தயார் செய்த போலி விசா மற்றும் விமான டிக்கெட்டுகளை கொடுத்தார்.

இதனை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர்கள், துபாய் செல்ல கள்ளக்குறிச்சியில் இருந்து கடந்த 11–ந் தேதி சென்னை விமான நிலையத்திற்கு செல்ல தயாராகினர். ஆனால் அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல அந்த டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் அங்கு வரவில்லை.

இதையடுத்து அந்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவரை செல்போனில் நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் அவர் செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லை. பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து ஏமாற்றப்பட்ட வாலிபர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, செல்போன் சிக்னல் மூலம் அவர் சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் திருவேற்காட்டிற்கு விரைந்து வந்து அந்த நபரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில், அவர் சென்னை திருவேற்காடு பெரியார் நகர் பெருமாள்அகரம் பகுதியை சேர்ந்த அருண்ராஜ் என்கிற கார்த்திக் (வயது 30) என்பது தெரியவந்தது. பின்னர் அருண்ராஜை விழுப்புரம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 52 பேரிடம் துபாயில் வேலை வாங்கித்தருவதாக கூறி நம்ப வைத்து ரூ.10 லட்சத்தை அருண்ராஜ் வசூல் செய்ததும், அவர்களுக்கு போலி விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை கொடுத்ததும், மோசடி செய்த பணத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அருண்ராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த போலி விசா தயாரிக்க பயன்படுத்திய 3 கணினிகள், 1 மடிக்கணினி, 52 போலி பாஸ்போர்ட்டுகள், 2 செல்போன்கள், ரூ.2 லட்சத்து 60 ஆயிரம், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அருண்ராஜை, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story