கலெக்டர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுடன் பெண்கள் போராட்டம்
மதுரையை அடுத்த ஒத்தக்கடை சேர்ந்தவர் தேவகி. இவர் கஞ்சா விற்பனை செய்வதாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் புகார் செய்தனர்.
மதுரை,
மதுரையை அடுத்த ஒத்தக்கடை பக்கம் உள்ள மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் தேவகி. இவர் கஞ்சா விற்பனை செய்வதாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் புகார் செய்தனர். அதனால் தேவகியை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் தேவகியின் மருமகள் திவ்யா தனது 2 உறவினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இங்கு திவ்யா தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து மீட்டனர். அப்போது திவ்யா தனது மாமியார் தேவகி மீது பொய்புகார் கொடுத்தவர்கள் தன்னையும் மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்பேரில் ஒத்தக்கடை போலீசார் மலைச்சாமிபுரத்தை சேர்ந்த பிரபாகர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள். இதற்கிடையில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மலைச்சாமிபுரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் பள்ளிக்கூட சீருடை அணிந்த தங்களது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்கள் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் தங்களது பகுதியில் போதைபொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என கோரி அவர்கள் கலெக்டர் வீரராகவராவிடம் மனு கொடுத்து சென்றனர்.