வடலூர் அருகே அன்னதான கூடத்தில் தீ விபத்து; அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு
வடலூர் அருகே அன்னதான கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதமானது. அடுத்தடுத்து 3 சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலூர்,
மதுரையை சேர்ந்தவர் நந்தி சரவணன். இவர் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் அன்னதான கூடம் அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். இங்கு வரும் ஏழை–எளிய மக்களுக்கு தினசரி 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அன்னதான கூடத்தில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அடுப்பின் அருகில் இருந்த பொருட்கள் மீது தீப்பிடித்தது.
அந்த தீ மளமளவென அன்னதானகூட கூரை கொட்டகை முழுவதும் பரவி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இந்த நிலையில் அன்னதான கூடத்தில் இருந்த 3 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அன்னதான கூடம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
மேலும் அங்கு இருந்த உணவு பொருட்கள், மேஜை, நாற்காலி மற்றும் மோட்டார் சைக்கிள், மொபட் உள்ளிட்டவை எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.