குடிநீர் வசதி செய்யக்கோரி பொட்டிரெட்டிப்பட்டி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு


குடிநீர் வசதி செய்யக்கோரி பொட்டிரெட்டிப்பட்டி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 14 Nov 2017 4:15 AM IST (Updated: 14 Nov 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொட்டிரெட்டிப்பட்டி கிராமமக்கள் நேற்று கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி போயர்தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பொட்டிரெட்டிப்பட்டி போயர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி கடந்த 15 ஆண்டுகளாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை தங்களிடம் (கலெக்டர்) மனு கொடுத்தோம். இதையடுத்து எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தற்காலிகமாக குடிநீர் வழங்கப்பட்டது.

ஆனால் எங்கள் தெருவில் உள்ள ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் மிரட்டி வருகிறார். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தும் எந்தவிட நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் உள்ள ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்கி, சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் இணைப்பு வழங்காத ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

ஆக்கிரமிப்பு

இதேபோல் பேளுக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பேளுக்குறிச்சி ஊராட்சியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயானத்தை தற்போது குப்பை கிடங்காக மாற்றிவிட்டனர். மயானத்தை ஒட்டி பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மயானத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும் மதுரைவீரன் கோவில் பிரிவில் இருந்து நாடார் தெரு வழியாக பழனியப்பர் கோவிலுக்கு செல்லும் வழியை தனிநபர் சிலர் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் எந்த ஒரு வாகனமும் செல்ல இயலாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆற்று ஓடையில் பன்றிகளை வளர்க்கும் கூடாரங்கள் அமைத்து உள்ளனர். இந்த கூடாரத்தை அகற்றி பன்றி தொல்லைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர். 

Next Story