கோவில்பட்டியில் துணிகர சம்பவம்: ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.1¾ லட்சம் கொள்ளை


கோவில்பட்டியில் துணிகர சம்பவம்: ஓட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.1¾ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 14 Nov 2017 4:30 AM IST (Updated: 14 Nov 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பீரோவை உடைத்து மர்ம மனிதர்கள் ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அரிசி பானையில் மறைத்து வைத்து இருந்ததால் 13 பவுன் நகைகள் கொள்ளை போகாமல் தப்பின.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-எட்டயபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது 40). இவர் தனது வீட்டின் தரைத்தளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். வீட்டின் மாடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி இவர், தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவுக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், நள்ளிரவில் அவருடைய ஓட்டலின் பின்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் மாடியில் உள்ள அவருடைய வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

நேற்று முன்தினம் மாலையில் ஜெகதீசன் குடும்பத்தினர் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது ஓட்டலின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், வீட்டில் பீரோவில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெகதீசன் தன்னுடைய 13 பவுன் நகைகளை வீட்டில் உள்ள அரிசி பானையில் மறைத்து வைத்து இருந்தார். அதனை கொள்ளையர்கள் பார்க்காததால், அதிர்ஷ்டவசமாக அந்த நகைகள் கொள்ளை போகாமல் தப்பின. இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார். 

Next Story