மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-14T02:40:27+05:30)

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

நெல்லை சந்திப்பு வடக்கு பாலபாக்கியா நகர், சிவந்திநகர் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘தச்சநல்லூரில் மேம்பாலம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் பாலத்துக்கு கீழே இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. அங்கு இணைப்பு சாலை அமைக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

ராதாபுரம் தாலுகா கீழ பண்டாரங்குளம், அச்சம்பாடு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘எங்கள் ஊரில் புனித தோமையார் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த நிலையில் ஒரு சிலர் ஆலயத்தில் திருவிழா நடத்துவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை சி.என்.கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊரில் உள்ள தேவர் ஸ்தூபியை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலப்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் கொடுத்த மனுவில், ‘நான் வீட்டு செலவுக்காக ஒருவரிடம் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். கடனை செலுத்திய பிறகும் எனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் செல்விநகரை சேர்ந்த தோல்பாவை கலைஞர் ராஜ் கொடுத்த மனுவில், ‘எனது அடையாள அட்டையில் எனது பெயர் மாறி இருக்கிறது. இதனால் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அடையாள அட்டையில் எனது பெயரை சரியான முறையில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் லட்சுமணன் கொடுத்த மனுவில், நெல்லை சந்திப்பு மதுரை ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

தமிழ் புலிகள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் காசிமேஜர்புரத்தை சேர்ந்த கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘தென்காசி அருகே உள்ள காசிமேஜர்புரத்தில் அருந்ததியர் தெரு உள்ளது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அங்கு வீடு கட்டி கொடுத்தார். அந்த வீடுகள் தற்போது பழுதடைந்து உள்ளது. அவற்றை புதுப்பித்து தர வேண்டும். அங்கு கழிப்பறை கட்டித்தர வேண்டும். குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டமாக செல்ல அனுமதி வழங்கவில்லை. அதனால் மனு கொடுக்க வந்தவர்கள், நுழைவு வாயில் அருகே நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த சோதனைக்கு பிறகே அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

Next Story