பட்டப்பகலில் துணிகரம்: கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணம் திருட்டு


பட்டப்பகலில் துணிகரம்: கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 Nov 2017 4:30 AM IST (Updated: 14 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டி சவேரியார் கோவில் வடக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான்பீட்டர்(வயது 49). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மேலும் அவருடைய மகன் வேலைக்கும், மகள் தோட்டத்திற்கும் சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து ஜான்பீட்டரின் மனைவி மேரி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டுச் சென்றார்.

இந்நிலையில் தோட்டத்திற்கு சென்ற ஜான்பீட்டரின் மகள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து மேரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மேரி அங்கு விரைந்து வந்தார்.

அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த துணிகள் மற்றும் நகை வைக்கப்பட்டிருந்த சிறிய பை உள்ளிட்டவை சிதறிக் கிடந்தன. இதன் பின்னரே பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், திருட்டு போன நகை, ஜான்பீட்டரின் மகள் திருமணத்திற்காக கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி சேர்த்து வைத்திருந்தது என்பது தெரியவந்தது. நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story