பிளாஸ்டிக் பொருட்களை தூளாக்கும் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.1 கோடி சேதம்


பிளாஸ்டிக் பொருட்களை தூளாக்கும் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.1 கோடி சேதம்
x
தினத்தந்தி 14 Nov 2017 4:45 AM IST (Updated: 14 Nov 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்களை தூளாக்கி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

பெரம்பலுர்,

பெரம்பலூர் வடக்கு மாதவிரோடு சமத்துவபுரம் அருகே ஏரிக்கரை பகுதியில் “தனலட்சுமி பிளாஸ்டிக்ஸ்“ என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலுள்ள பழைய இரும்பு கடைகள், உடைந்த பிளாஸ்டிக்கை வாங்கும் வியாபாரிகள் உள்ளிட்டோரிடமிருந்து பல்வேறு வகையான பழைய பிளாஸ்டிக் பொருட்களை அந்த நிறுவன ஊழியர்கள் சேகரித்து கொண்டு வருவர்.

பின்னர் அவற்றை ஊழியர் தரம் பிரித்து நவீன எந்திரங்கள் மூலம் அரைத்து தூளாக்கி விடுவர். இந்த பணியில் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர். தூளாக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருளை திருச்சி, சேலம், மதுரை, சென்னை உள்ளிட்ட வெளியிடங்களிலுள்ள புதிய பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் நிறுவனத்தினருக்கு விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனத்தை பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் வேணுகோபால் (வயது 70), அவரது மருமகள் தமிழ்க்கொடி ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வேலை முடிந்ததும் நிறுவனத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர். பின்னர் 7.30 மணியளவில் நிறுவனத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வெப்பத்தினால் உருகுவதை போல் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு நாற்றமடித்தது. பிறகு திடீரென அந்த நிறுவனத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், தூளாக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் உள்ளிட்டவை கொழுந்து விட்டு எரியத்தொடங்கின.

மேலும் வெப்பத்தினால் உள்ளே இருந்த சிலிண்டர் உபகரணங்கள் வெடித்து சிதறின. அப்போது தான் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதை அறிந்து வெளியே வந்த குடியிருப்பு பகுதி மக்கள், பிளாஸ்டிக் நிறுவனம் தீப்பிடித்து எரிவதை கண்டு இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில், உதவி தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் உள்பட தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கொழுந்து விட்டு எரிந்த பொருட்கள் மீது தண்ணீரை இடைவிடாமல் பீய்ச்சி அடித்தனர்.

அப்போது நிறுவன கட்டிடத்தின் முன்புற பகுதியில் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஷ் ஷீட் மேற்கூரையானது திடீரென சரிந்து கீழே விழுந்தது. நிறுவனத்தை சுற்றி வளர்க்கப்பட்ட மரங்களும் தீப்பிடித்து எரிந்தன. நிறுவன கட்டிட சுவரானது வெப்பம் தாங்காமல் நொறுங்கியது. சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தான் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் பிளாஸ்டிக்குகளை அரைத்து தூளாக்கும் நவீன எந்திரங்கள், பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், பழைய பிளாஸ்டிக்குகள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக பெரம்பலூர் போலீசின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மின்கசிவு காரணமாக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story