அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதியில் அஷ்டபந்தன மருந்து மீண்டும் சாற்றப்பட்டு பரிகார பூஜை


அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னதியில் அஷ்டபந்தன மருந்து மீண்டும் சாற்றப்பட்டு பரிகார பூஜை
x
தினத்தந்தி 14 Nov 2017 4:30 AM IST (Updated: 14 Nov 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னதியில் பெயர்ந்த அஷ்டபந்தன மருந்து மீண்டும் சாற்றப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை,

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிலில் உள்ள அனைத்து சன்னதியிலும், சாமி சிலைகளை சுற்றி அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.

இந்த மருந்து சாத்தப்படும்போது மூலவர் சிலையை சுற்றி தங்கம், வைர நகைகள் மற்றும் முத்து, பவளம் போன்ற விலை உயர்ந்த கற்கள் வைப்பது வழக்கம். அவற்றின் மீது அஷ்டபந்தன மருந்தை வைத்து அழுத்தம் கொடுத்து சாற்றப்படும். அவ்வாறு சாற்றப்படுவதால் மூலவர் சிலை ஆடாமல், அசையாமல் இருப்பதுடன் சாமியின் சக்தியும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஓரிரு மாதங்களில் மூலவர் அருணாசலேஸ்வரருக்கு சாற்றப்பட்ட அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது. இது குறித்து குருக்கள்கள் மூலம் கடிதம் எழுதி வாங்கி இந்து சமய ஆணையர் ஜெயாவிற்கு கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் கடந்த 6-ந் தேதி தலைமை ஸ்தபதி முத்தையன், கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி சென்னையில் இருந்து கூடுதல் ஆணையர்கள் திருமகள் மற்றும் சுதர்சன் ஆகியோர் கோவிலுக்கு வந்து கோவில் அலுவலர்கள் மற்றும் குருக்கள்களிடம் விசாரணை நடத்தினர். அதே நாளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அவரிடம் இது குறித்து கேட்டபோது எழுத்துபூர்வமாக புகார் வந்தால் உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

கடந்த 12-ந் தேதி இணை ஆணையர் தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் குருக்கள்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு தலைமை ஸ்தபதி முத்தையன் வந்தார். மேலும் வேலூரில் இருந்து பொக்கிஷ நகை மதிப்பீட்டாளர்கள் விஜயன், குமார் ஆகியோரும் வந்தனர். அவர்கள் கோவில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து பகல் 12.30 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு தலைமை ஸ்தபதி முத்தையன், பொக்கிஷ நகை மதிப்பீட்டாளர்கள் விஜயன், குமார், கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன், குருக்கள்கள் கீர்த்தி ரமேஷ், கீர்த்தி வாசன், மணியக்காரர் செந்தில் ஆகியோர் மூலவர் சன்னதியில் பிரம்ம பாகத்தில் விலகி இருந்த அஷ்டபந்தன மருந்தை விலக்கிவிட்டபின் நகைகளை எடுத்து மறுஆய்வு செய்தனர். பின்னர் மீண்டும் அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து உள்ள இடத்தில் அஷ்டபந்தனம் சாற்றப்பட்டதாக இணை ஆணையர் ஜெகன்னாதன் கூறினார்.

மாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு அருணாசலேஸ்வரர் சன்னதியில் இருந்து அவர்கள் வெளியே வந்தனர். அப்போது பொக்கிஷ நகை மதிப்பீட்டாளர் விஜயன் கூறுகையில், “மூலவர் சன்னதியில் அஷ்டபந்தன மருந்து விரிசல் ஏற்பட்டு உள்ள இடத்தில் இருந்த நகைகள் சரிபார்க்கப்பட்டது. பொக்கிஷ பெட்டகத்தை தற்போது நான் பார்க்கவில்லை. அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து உள்ள இடத்தில் வைக்கப்பட்ட நகைகளை மட்டுமே சரி பார்த்து உள்ளேன். விரிசல் விட்ட இடத்தில் அஷ்டபந்தன மருந்து மீண்டும் பூசப்பட்டு உள்ளது” என்றார்.

தலைமை ஸ்தபதி முத்தையன் கூறுகையில் “மூலவர் சன்னதியில் உள்ள அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து உள்ளதாக தலைமைஆணையருக்கு கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அஷ்டபந்தனம் சாத்தப்பட்ட இடம் பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பிரம்ம பாகத்தில் உள்ள தரையில் 5 இடங்களில் அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து இருந்தது. அதுவும் மூலவருக்கு அதிக அபிஷேகம் செய்ததால், தரையில் தண்ணீர் தேங்கி அஷ்டபந்தனம் பெயர்ந்து இருக்கலாம். அஷ்டபந்தன மருந்து பெயர்ந்து உள்ள இடங்களில் மீண்டும் மருந்து சாத்தப்பட்டு உள்ளது. இது நிரந்தரமானது” என்றார்.

அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் கூறுகையில், “மதியம் 1 மணிக்கு மேல் பழைய மருந்து எடுக்கப்பட்டு புதிய மருந்து சாத்தப்பட்டு உள்ளது. மாலையில் பரிகார பூஜை செய்யப்பட்டது. அஷ்டபந்தன மருந்து பெயர்ந்த இடத்தில் இருந்த நகைகள் குறித்து பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகை திருட்டு போவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை” என்றார். 

Related Tags :
Next Story