குளச்சலில் 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை மர்ம கும்பல் கைவரிசை


குளச்சலில் 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை மர்ம கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 13 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-14T02:44:22+05:30)

குளச்சலில் 2 கோவில்களில் பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

குளச்சல்,

குளச்சல் சன்னதி தெருவில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். வழிபாடுகள் முடிந்த பின்பு கோவிலை பூசாரி மற்றும் நிர்வாகிகள் பூட்டி செல்வார்கள். அதன்படி நேற்றுமுன்தினம் இரவும் கோவிலில் வழிபாடுகள் முடிந்த பின்பு கதவை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலையில் பூசாரி, கோவிலை திறக்க சென்றார். அவர் காம்பவுண்டு கேட்டை திறந்து உள்ளே சென்ற போது, கோவிலில் வைத்திருந்த கைமணி, தட்டு போன்ற பூஜை பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

யாரோ மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்து பூஜை பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இது பற்றி பூசாரி கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். ஊர் தலைவர் பிரேம் ஜித் கவுதம், துணை தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் விரைந்து சென்றனர்.

அவர்கள் கோவிலில் கொள்ளை நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி குளச்சல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே குளச்சல் கீழத்தெருவில் உள்ள இன்னொரு கோவிலிலும் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. இங்குள்ள இசக்கியம்மன்  கோவிலின் கதவு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உள்ளனர்.

அவர்கள் கோவிலில் இருந்த 2 குத்துவிளக்கு உள்ளிட்ட பொருள்களை கொள்ளை அடித்து  சென்றுள்ளனர். இது பற்றி இசக்கியம்மன் கோவில் நிர்வாகிகள் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். இது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரே நாளில் இரண்டு அம்மன் கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி  மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story