வயிற்று வலியால் அவுரங்காபாத் ஆஸ்பத்திரிக்கு 1,000 பேர் படையெடுப்பு


வயிற்று வலியால் அவுரங்காபாத் ஆஸ்பத்திரிக்கு 1,000 பேர் படையெடுப்பு
x
தினத்தந்தி 13 Nov 2017 10:16 PM GMT (Updated: 2017-11-14T03:46:06+05:30)

நீர் மாசுபாடு காரணமாக அவுரங்காபாத்தில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு அவர்கள் ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர்.

மும்பை,

அவுரங்காபாத் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில், மாசுபடிந்த தண்ணீர் வருகிறது. இதனை குடித்த அப்பகுதி மக்களுக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால், அவர்கள் அவுரங்காபாத் அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் நாவல்கிஷோர் ராம் கூறும்போது, “கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீர் குழாய்களை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. குடிநீரில் சற்று மாசு கலந்து இருக்கிறது. இதனால், தான் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. எனினும், அனைவரும் மாசுகலந்த குடிநீரை குடித்ததால் தான் வயிற்றுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறி விட முடியாது” என்றார்.

மேலும், பாதிக்கப்பட்ட அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், பெரும்பாலானோர் சீரான இடைவெளியில் சிகிச்சையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவுரங்காபாத்தில், மாசுகலந்த குடிநீரை குடித்த 1,000-க்கும் மேற்பட்டோர், வயிற்று வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story