பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெலகாவி,
பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் எனது பெயர் இடம் பெறவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்னை வலியுறுத்துவது சரியா?. சி.பி.ஐ. விசாரணை நடைபெறட்டும். 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.அதன்படி விசாரணை அறிக்கை வரட்டும். அதை விடுத்து, இப்போது சபையை நடத்த விடமாட்டோம் என்று பா.ஜனதாவினர் கூறுவது சரியல்ல. இது முழுவதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. போலீஸ் அதிகாரி கணபதியின் தற்கொலைக்கான காரணங்களை கண்டறியும்படி சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு எனது பெயரை கூறாதபோது ராஜினாமா செய்யுமாறு பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். அவர்கள் கேட்ட உடனேயே பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜனதாவின் பேச்சை பார்க்கும்போது சி.பி.ஐ. மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது.சபையில் அரசுக்கு எதிராக பேச எந்த விஷயமும் பா.ஜனதாவினரிடம் இல்லை. இதனால் எனது விவகாரத்தை அவர்கள் கிளப்புகிறார்கள். மாநிலத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பா.ஜனதாவினருக்கு அக்கறை இல்லை.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
Related Tags :
Next Story