தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் திருக்கல்யாண விழா திரளான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் சுவாமி–அம்பாள் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் சுவாமி–அம்பாள் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.
சங்கரராமேசுவரர் கோவில்தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா, கடந்த 3–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. விழா நாட்களில் அம்பாள் கிளிவாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளிமயில் வாகனம், வெள்ளி விருஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 9–ம் திருநாளில் அம்பாள் தேரில் எழுந்தருளி, தேரோட்டம் நடந்தது. மறுநாள் மஞ்சள் இடித்தல் (திருப்பொற்சுண்ணம்), பாகம்பிரியாள் அம்பாளுக்கு குடமுழுக்கு தீர்த்தவாரி தீபாராதனை, பாகம்பிரியாள் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
திருக்கல்யாணம்விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சுவாமி–அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. காலை 6 மணிக்கு பாகம்பிரியாள் அபிஷேகம், தீபாராதனை, 7–15 மணிக்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலை 5–15 மணிக்கு சங்கரராமேசுவரர் விருஷப வாகனத்தில, பாகம்பிரியாள் அம்பாளுக்கு காட்சி தருதல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள்–சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. 9–30 மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.