பந்தலூர் அருகே போலி டாக்டர் கைது
பந்தலூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பகுதியில் போலி டாக்டர் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மருத்துவ சுகாதாரதுறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரகுபாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் இரியன் ரவிக்குமார், துணை இயக்குனர் டாக்டர் நிர்மலா, சித்தா மருத்துவ அலுவலர் விஜயக்குமார், மருந்து ஆய்வாளர் சாகுல் அமீது, உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உப்பட்டி பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உப்பட்டியில் இருந்து அட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டை மருத்துவ தனிப் படை குழுவினர் சோதனை செய்தனர். அந்த வீட்டில் பாரம்பரிய மருந்து பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 60) என்பதும், அவர் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.
இது பற்றி மருத்துவ குழுவினர் தேவாலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், காவலர் ராஜ்குமார் உள்பட போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் கண்ணதாசனை கைது செய்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பாரம்பரிய மற்றும் சித்த மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து மருத்துவ நல பணி இணை இயக்குனர் டாக்டர் ரகுபாபு கூறியதாவது:–
உப்பட்டியில் போலி டாக்டர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு, பாரம்பரிய மருந்து விற்க மாவட்ட கலெக்டரிடம் உரிமம் பெற வேண்டும். ஆனால் அது போல் எந்த அனுமதியும் பெற வில்லை. இதனால் அவர் போலி டாக்டராக பணியாற்றியது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட நபர் பி.ஏ. பட்டதாரி, டிப்ளமோ யோகா படித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிதிர்காடு பகுதியில் போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.