நெல்லியாளம் நகராட்சியில் பாலம் சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


நெல்லியாளம் நகராட்சியில் பாலம் சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:00 AM IST (Updated: 15 Nov 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லியாளம் நகராட்சியில் பாலம் சீரமைப்பு பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

பந்தலூர்,

கூடலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சி வாழவயலில் இருந்து சோழவயலுக்கு செல்லும் சாலையின் குறுக்கே ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய பாலம் கட்டப்பட்டது. தற்போது அது மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

எனவே பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நெல்லியாளம் நகராட்சியின் பொதுநிதியில் இருந்து ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டது. அந்த நிதியில் பாலம் சீரமைப்பு மற்றும் அதன் மறுபுறம் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் பாலம் அமைக்கும் பணி தரமானதாக நடைபெற வில்லை என்று அந்த பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பாலம் சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள், தரமாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடைய வில்லை. இதனால் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் பணிகள் தரமாக நடைபெற நடவடிக்கை எடுப்பதாக பணி மேற்பார்வையாளர் உறுதி அளித்தார். அதை ஏற்று மதியம் 3½ மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story