மாணவன் விஷம் குடித்ததால் தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
அய்யப்பன் தாங்கலில் அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் அருண்குமார்(வயது 16), போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நண்பருக்கு பிறந்தநாள் என்பதால் பள்ளி நேரத்தில் பள்ளியின் முன் பகுதியில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடியதாகவும் அப்போது அருகில் இருந்த வீடுகளில் பட்டாசுகள் நெருப்புகள் விழுந்ததால் அந்த பகுதி மக்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் கூறி உள்ளார். அதில் அருண்குமாரும் ஒருவர். இந்த நிலையில் நேற்று பெற்றோரை ஏன் அழைத்து வரவில்லை என்று அருண்குமாரிடம் தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார்.
அதற்கு தான் அழைத்து வருவதாக கூறிய அருண்குமார் சிறிது நேரத்தில் கையில் வைத்திருந்த எலி மருந்தை (விஷம்) தண்ணீரில் கலக்கி குடித்து விட்டார். இதனைக்கண்டதும் வகுப்பு ஆசிரியர் பதறிப்போய் உடனே மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் உப்பை தண்ணீரில் கரைத்து குடிக்க வைத்து அருண்குமாரை வாந்தி எடுக்க வைத்தனர்.
பின்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்ததும் உடன் பயிலும் மாணவர்கள் 40–க்கும் மேற்பட்டோர் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் விடுமுறை எடுத்து விட்டு வந்தால் அபராதம் விதிப்பது மற்றும் உணவு வேலையில் கடைக்கு சென்று விட்டு வந்தால் பள்ளி தலைமை ஆசிரியர் மிரட்டுகிறார் என்றும் தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பள்ளி வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.