பா.ஜனதா பிரமுகர் தற்கொலை: கைது செய்யக்கோரி பிணத்துடன் சாலை மறியல்
மாதவரத்தில் பா.ஜனதா பிரமுகர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது பிணத்துடன் சாலையில் அமர்ந்து பா.ஜனதாவினர் மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 43). பா.ஜனதா பிரமுகர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கபாலி, அசோக் ஆகியோருக்கும், பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாலாஜியை அவர்கள் 2 பேரும் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுதொடர்பாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபாலியை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த பிறகு பாலாஜிக்கு தலைவலி அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பாலாஜி நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பிரேத பரிசோதனை முடிந்து பாலாஜியின் உடல் நேற்று காலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பாலாஜி தாக்கப்பட்டதால்தான் மனம் உடைந்து இறந்தார், அவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே சாலையில் பாலாஜியின் உடலுடன் அமர்ந்து பா.ஜனதாவினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வன், உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும் பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் மாதவரம்–செங்குன்றம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.