செஞ்சி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளி பகுதி வழியாக உறவினர்கள் எடுத்து செல்லும் அவலம்


செஞ்சி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளி பகுதி வழியாக உறவினர்கள் எடுத்து செல்லும் அவலம்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே குறிஞ்சிப்பை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1,500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

செஞ்சி,

செஞ்சி அருகே குறிஞ்சிப்பை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1,500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஒரளவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமத்தில் இருந்து சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை.

 இது குறித்து பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிஞ்சிப்பை கிராமத்தில் இருந்து அங்குள்ள சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலை வசதியை இதுவரை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மேற்கண்ட கிராமத்தில் யாரேனும் இறந்தால், அவரின் உடலை உறவினர்கள் வேறு வழியின்றி அங்குள்ள வயல்வெளி பகுதி வழியாக சுடுகாட்டுக்கு எடுத்து சென்று அடக்க செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறியதாவது:–

எங்கள் ஊரில் இருந்து சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலை வசதி முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம். சமீபத்தில் எங்களை ஊரை சேர்ந்த ஒருவர் இறந்தார். வேறு வழியின்றி அவரின் உடலை விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிரின் வழியாக நாங்கள் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று அடக்கம் செய்தோம். வயல்வெளி வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சம்பந்தபட்ட உறவினர்கள் அதிக அளவில் கலந்து கொள்வது இல்லை. இதை தடுக்க எங்கள் ஊரில் இருந்து சுடுகாட்டுக்கு செல்வதற்கான சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.


Next Story