கள்ளக்குறிச்சி அருகே சோகம் மர்ம காய்ச்சலுக்கு ஓட்டல் ஊழியர் பலி; அதிர்ச்சியில் தாய் சாவு
கள்ளக்குறிச்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஓட்டல் ஊழியர் பலியான சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த அவருடைய தாய் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூர் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சேகர்(வயது 42). கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி(36) என்ற மனைவியும் சுகந்தி(17) என்ற மகளும், சசி(14) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி நகராட்சி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குணமாக வில்லை. இதையடுத்து சம்பவத்தன்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேகரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சேகர் உயிரிழந்தார்.
இதுபற்றி உறவினர்கள் வீட்டில் இருந்த சேகரின் தாய் அஞ்சலையிடம்(68) செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மகன் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலை அதேஇடத்தில் கீழே மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஞ்சலை ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.