நிலம், வீட்டை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு


நிலம், வீட்டை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Nov 2017 3:30 AM IST (Updated: 15 Nov 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

நிலம், வீட்டை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு கோரிக்கை மனு கொடுக்க வரும் பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலக பெருந்திட்ட நுழைவுவாயில் மற்றும் பின்புற வாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்கள் ஒவ்வொருவரையும் தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். இருப்பினும் வானூர் தாலுகா எறையூரை சேர்ந்த குமார் (வயது 44) என்ற விவசாயி தனது மனைவி உமாபதி, மகன் காங்கேயன் (13), மகள்கள் கவுசல்யா (12), கலைச்செல்வி (11) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு போலீசாரின் கெடுபிடியை பார்த்த அவர்கள் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தம் வழியாக தாலுகா அலுவலகத்தின் இடதுபுறம் வந்து அங்கிருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவுவாயில் அருகில் சென்றனர். உடனே குமார், தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முடிவு செய்து தான் பையில் கொண்டு வந்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினார்கள். பின்னர் அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் குமார் கூறியதாவது:–

நான் எனது கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2010–ம் ஆண்டு வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடனாக கேட்டேன். அதற்கு பணம் தருவதாக கூறிய அவர் அதற்கு ஈடாக என்னுடைய 66 சென்ட் நிலத்தை அடமானமாக தரும்படி கேட்டார். நான் எனது நிலத்தை அடமானம் செய்து அவரிடம் நிலத்திற்குரிய பத்திரங்களை கொடுத்தேன். அதன் பிறகு என்னுடைய குடும்ப செலவிற்காக சிறுக, சிறுக அவரிடம் இருந்து பணம் பெற்று மொத்தம் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்தை வாங்கினேன்.

பின்னர் கடந்த 12.10.17 அன்று நான் அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்தேன். அந்த பணத்தை அவர் வாங்க மறுத்துவிட்டார். மேலும் அவருக்கு நான் கொடுக்க வேண்டிய பணத்திற்கு பதிலாக என்னுடைய நிலத்தை கிரையம் செய்துகொண்டதாக கூறினார். இதற்கு நியாயம் கேட்டபோது நிலத்தை கொடுக்க வேண்டுமெனில் 6 பைசா வட்டியுடன் ஒரே தவணையில் ரூ.17 லட்சம் கொடுக்குமாறு மிரட்டுகிறார். இதுபற்றி கிராம முக்கியஸ்தர்களிடம் சென்று முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. வானூர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கந்துவட்டி முறையில் என்னிடம் பணம் கேட்டு மிரட்டும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய நிலத்தை மீட்டுத்தர போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். மேலும் அரசு அலுவலகம் முன்பு இதுபோன்று அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை போலீசார் எச்சரித்தனர்.

இதேபோல் செஞ்சி தாலுகா நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி பிரேமா (50) என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முடிவு செய்து மண்எண்ணெய் கேனுடன் வந்தார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் போலீசாரிடம் பிரேமா கூறுகையில், நான் கடந்த 2016–ம் ஆண்டில் என்னுடைய வீட்டை சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.7½ லட்சத்திற்கு அடமானம் வைத்து அதற்கான உரிய பத்திரங்களை கொடுத்தேன். ஆனால் அந்த நபர் என்னை கேட்காமல் என்னுடைய வீட்டை வேறொரு நபருக்கு அதிக விலைக்கு விற்றுவிட்டார். இதுபற்றி அவரிடம் சென்று கேட்டதற்கு என்னை மிரட்டி வருகிறார். இதுகுறித்து செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய வீட்டை மீட்டுத்தர வேண்டும் என்றார். அதற்கு இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். மேலும் பிரேமாவையும் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story