சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை: மதுரை விமான நிலையத்தில் 1¼ கிலோ தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மதுரை,
சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த கவுத்முகைதீன் என்பவர் ஒலிபெருக்கிக்கு பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் சாதனத்தில் 1 கிலோ 184 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 35 லட்சம் ரூபாய் ஆகும். அதனை சுங்கத்துறை துணை கமிஷனர் ஜெயபாரதி தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோன்று சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த விமானத்தில் பயணி ஜியாவுதீன் என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் பிரட் டோஸ்டர் சாதனத்தில் மறைத்து வைத்திருந்த 108 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் அதனை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் ஒரே நாளில் மொத்தம் 1 கிலோ 292 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.