குடிநீர் கேட்டு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
பழனி,
பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இருந்தபோதிலும் கிராம பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பழனி அருகே உள்ள சித்திரைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோலம்மாவலசு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.