பொங்கலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
பொங்கலூர் அருகே உள்ள கெங்கநாயக்கன்பாளையத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம், காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது கொங்கநாயக்கன்பாளையம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை 8.30 மணியளவில் கெங்கநாயக்கன்பாளையம் நால்ரோட்டில் திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் லாரி, டெம்போ ஆகியவற்றை சிறைபிடித்தனர். இதனால் இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் பள்ளி குழந்தைகளும் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்தும் அவினாசிபாளையம் போலீசார், மற்றும் பல்லடம் தாசில்தார் சுப்பிரமணியம், வருவாய் அதிகாரி சபரி, பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் மீனாட்சி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியதாவது:–
எங்கள் பகுதிக்கு கடந்த 1½ மாதமாக அத்திக்கடவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எங்கள் பகுதியில் மூன்று ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. அதில் 200 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. மற்றொரு இடத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் மோட்டார் கிடையாது. மழைநீர் சேகரிப்பு குட்டைக்கு அருகில் புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றுக்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் என்பது கிடையாது. தற்போது அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்றுதான் குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகிறோம். அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீருக்காக குடத்தை எடுத்துக்கொண்டு பல இடங்களுக்கு அலைவேண்டியுள்ளது. அதனால்தான் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக அத்திக்கடவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் திருமலைநாயக்கன்பாளையத்தில் இருந்து தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி அங்கு குடிநீர் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கே போதுமான தண்ணீர் இல்லை என்றும், இங்கிருந்து குடிநீர் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்தனர். இதனால் அந்த பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் எடுக்க கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது.