பொம்மையார்பாளையத்தில் சுடுகாட்டு சாலை சேதமடைந்ததால் மீனவர் உடல் கடல் வழியாக எடுத்துச்சென்று அடக்கம்


பொம்மையார்பாளையத்தில் சுடுகாட்டு சாலை சேதமடைந்ததால் மீனவர் உடல் கடல் வழியாக எடுத்துச்சென்று அடக்கம்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:45 AM IST (Updated: 15 Nov 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

பொம்மையார்பாளையத்தில் கடல் சீற்றத்தால் சாலை சேதமடைந்தது. இதனால் மீனவரின் உடலை கடல் வழியாக உறவினர்கள் எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே பொம்மையார்பாளையம் கடற்கரை கிராமம் உள்ளது. இங்கு கடல் சீற்றத்தால் கடற்கரையோரம் இருந்த 7 வீடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து சேதமடைந்தன. மேலும் அங்கிருந்த சிமெண்டு சாலையும், மரங்களும் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மீனவர் குமரன் (வயது 29), குடும்ப பிரச்சினை காரணமாக வைத்திக்குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை அடக்கம் செய்ய நேற்று உறவினர்கள் பொம்மையார்பாளையத்துக்கு எடுத்துவந்தனர். அங்கு அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்லும் பாதை கடல் சீற்றத்தால் சேதமடைந்தும், கடல்நீர் சூழ்ந்தும் உள்ளது. எனவே அந்த வழியாக உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து பாடையுடன் உறவினர்கள் கடலில் இறங்கி கரையோரம் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு எடுத்துச்சென்றனர். பின்னர் கடற்கரையில் மேடான பகுதியில் ஏறி, வண்டியில் உடலை ஏற்றிச்சென்று அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடற்கரையோரம் உள்ள எங்கள் கிராமத்தில் கடல் அரிப்பால் 50–க்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை சேதமடைந்துள்ளன. தொடர்ந்து பல்வேறு வீடுகளை கடல் ஆக்கிரமிக்கும் நிலை உள்ளது. சுடுகாடு செல்லும் சாலையும் சேதமடைந்திருப்பதால் யாராவது இறந்தால் கடலில் இறங்கி உடலை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. எனவே எங்கள் கிராமத்தை காப்பாற்றும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.


Next Story