குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவ, மாணவிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் கலெக்டர் பேச்சு


குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவ, மாணவிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2017 4:15 AM IST (Updated: 15 Nov 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய கலெக்டர் ரோகிணி, மாணவ, மாணவிகள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார்.

சேலம்,

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சுற்றி காண்பித்தனர். அப்போது அலுவலகத்தில் அரசுத்துறைகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ரோகிணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் அதிகாரிகள் மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-மாணவர்கள் சிறு வயதில் இருந்தே தாங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மாணவ, மாணவிகள் கல்வி அறிவோடு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் தங்கள் வாழ்வின் குறிக்கோளை அடைய செய்ய, மிக சிறந்த வாய்ப்பாக அமையும். மாணவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் மிக சிறப்பாக பதில் அளித்தனர். தொடர்ந்து என்னிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

குறிப்பாக தங்களின் முன்னேற்றத்தையும் தாண்டி, இந்தியா முன்னேறுவதற்கும், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், பரந்த மனப்பான்மையுடைய கேள்விகளை கேட்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு நமது பங்கு என்ன என்பதை சிறுவயதிலேயே அரசு பள்ளி மாணவர்கள் தொலைநோக்குடன் சிந்திக்கின்றனர்.

தமிழக முன்னேற்றத்திற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கி கூறி உள்ளோம்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன், அவர்களுக்கு கல்வியுடன் இது போன்ற வெளி உலக நடவடிக்கைகளை அதிக அளவில் தெரிந்துக்கொள்ள பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து மாணவர்கள் எதிர்காலத்தில் தலைசிறந்தவர்களாக திகழச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story