ராசிபுரம் அருகே சென்டர் மீடியன் மீது டிரெய்லர் லாரி மோதி விபத்து; டிரைவர் பலி


ராசிபுரம் அருகே சென்டர் மீடியன் மீது டிரெய்லர் லாரி மோதி விபத்து; டிரைவர் பலி
x
தினத்தந்தி 15 Nov 2017 4:15 AM IST (Updated: 15 Nov 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே சென்டர் மீடியன் மீது டிரெய்லர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார்.

ராசிபுரம்,

திருச்சி பொன்மலையில் இருந்து ரெயில் தண்டவாளங்களை ஏற்றிக்கொண்டு ஒரு டிரெய்லர் லாரி சேலம் மாவட்டம் ஓமலூர் ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலையில் அந்த டிரெய்லர் லாரி வழியில் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழைய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகில் சென்றபோது சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிரெய்லர் லாரியில் இருந்த ரெயில் தண்டவாளங்கள் ரோட்டில் சரிந்தன. மேலும் டிரெய்லர் லாரியின் முன் பகுதி சேதம் அடைந்தது.

டிரைவர் பலி

இந்த விபத்தில் தண்டவாளங்கள் சரிந்து அமுக்கியதில் டிரெய்லர் லாரி டிரைவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வேளாணி முந்தல் பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன் (வயது 22) என்பவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். நாகப்பட்டினம் மாவட்டம், முனீஸ்வரர் கோட்டம், ஒட்டை தட்டை பகுதியைச் சேர்ந்த கிளனர் அஜீத்குமார் (20) லேசான காயம் அடைந்தார். இவர் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரைவர் செல்வேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரோட்டில் தண்டவாளங்கள் சரிந்து விழுந்து கிடந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகேயினி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அடிக்கடி விபத்து

இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுனர்கள் மற்றும் டிரைவர்கள் கூறும்போது, சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் உயரம் தரை மட்ட அளவில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சென்டர் மீடியன் இருப்பது தெரியவில்லை. எனவே சென்டர் மீடியன் சுவரை உயர்த்தி கட்ட வேண்டும். விபத்து நடந்த ரோட்டின் கிழக்குப்புறம் மிகவும் பள்ளமாக உள்ளது. எந்தவிதமான சிக்னலும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இது தொடர்பாக அதிகாரிகள் தக்க ஏற்பாடுகள் செய்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Related Tags :
Next Story