150 குடிசை வீடுகள், கடைகள் இடிப்பு குடியிருப்புவாசிகள் மீது போலீஸ் தடியடி, 34 பேர் கைது


150 குடிசை வீடுகள், கடைகள் இடிப்பு குடியிருப்புவாசிகள் மீது போலீஸ் தடியடி, 34 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2017 5:00 AM IST (Updated: 15 Nov 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

வகோலா மதராஸ்வாடி பைப்லைன் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 150 குடிசை வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டது. குடியிருப்புவாசிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு வகோலா பைப்லைன் மதராஸ்வாடி காவ்தேவி பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு அதிகளவில் தமிழர்கள் உள்ளனர். சேலம், விருத்தாசலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பைப்லைன் ஓரமாக உள்ள இவர்களது வீடுகளை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது. மேலும் வீடுகளை இழப்பவர்களுக்கு அரசு சார்பில் அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடிசை இடிப்பதற்காக குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் காலி செய்யவதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை.

இதை எதிர்த்து குடியிருப்புவாசிகள் ஐகோர்ட்டில் இருந்து, குடிசைகளை இடிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றனர். ஆயினும் நேற்றுமுன்தினம் வந்து மாநகராட்சியினர் 2 குடிசை வீடுகளை இடித்தனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் அங்குள்ள குடிசை வீடுகளை இடிப்பதற்காக மாநகராட்சியினர் பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இருப்பினும் வீடுகளை இடிக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சியினர் போலீசார் உதவியுடன் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் தள்ளுமுள்ளு உண்டானது. நிலைமையை சமாளிப்பதற்காக போலீசார் குடியிருப்புவாசிகள் மீது தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் சிதறி ஓடினார்கள்.

மேலும் மாநகராட்சியினருடன் கைகலப்பில் ஈடுபட்டதாக 12 பெண்கள் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் அங்குள்ள சுமார் 150 குடிசை வீடுகள் மற்றும் கடைகள் இடித்து தள்ளப்பட்டன.

இந்த நிலையில், இது பற்றி தகவல் அறிந்த கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்பின்னர் குடிசைகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


Next Story